#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

வடிவேலு மீம் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி?

வடிவேலு மீம் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரபல நடிகர் உச்ச நட்சத்திரமாக இருப்பார். இது போலதான் காமெடி நடிகர் மற்றும் நடிகைகளும். இதில் தலைமுறை கடந்து மார்க்கெட்டில் தொடரும் நடிகர்கள் சொற்பம்தான். உதாரணத்திற்கு நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சொல்லலாம். ஆனால் காமெடி நடிகர்கள் அப்படி அல்ல. நிறைய வெற்றிப்படங்களில் நடிக்கும் பொழுது தன்னிச்சையாக அவர்கள் வருடக்கணக்கில் திரையுலகில் தொடர்வார்கள். அந்த வகையில் 2011 க்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காத வடிவேலுவை தமிழ் சினிமா தேடுவது ஏன்? மீம் உலகின் சூப்பர் ஸ்டாராக வடிவேல் உச்சம் தொட்டது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

எம் ஜி ஆர், சிவாஜி காலகட்டங்களில் நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு என காமெடியில் உச்சத்தில் திகழ்ந்த நிறைய பேர் இருந்தார்கள். அவர்களுக்கு பொறாமை கொள்ள முடியாத அளவிற்கு தொடர்ந்து படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் காமெடியும் ஒருத்தர் போல இன்னொருவர் காமெடி இல்லாமல், ஒவ்வொருவரும் தனித்துவத்துடன் தன் பாணியில் நகைச்சுவையை வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அதன் பின் ரஜினி கமல் காலகட்டங்களில் ஒய் ஜி மகேந்திரன், சுருளி ராஜன், போன்ற காமெடி நடிகர்கள் தன் தனித்தன்மையான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். 

கவுண்டமணி 70 களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருந்தாலும், 16 வயதினிலே படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. இருந்தாலும் அது முன்னணி இடத்திற்கு அவரை சேர்க்கவில்லை. 1984-ல் வெளி வந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணியும் செந்திலும் இணைந்து கலக்க, இந்த ஜோடி அதன் பின் பல வருடங்கள் இணை பிரிய ஜோடியாக ஹிட் அடித்தது.

90-களில் அனைத்து நடிகர்களும் தேடும் தவிர்க்க முடியாத ஆளாக கவுண்டமணி விளங்கினார். ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ் என இந்த கூட்டணியின் பட்டியல் நீளம். அதுவும் சத்யராஜும் இவரும் சேர்ந்து விட்டால் அலப்பறை தாங்க முடியாது.

இவர்களுக்கு நடுவில் தனி ஆளாக காமெடி சாம்ராஜ்யம் நடத்தியவர் ஜனகராஜ்.

97-களுக்கு பிறகு கவுண்டமணி மார்க்கெட் மெலிதாக சரிய 90 களில் சிறு சிறு வேடங்களில் நடித்து கொண்டிருந்த வடிவேலு அந்த இடத்தைப் பிடிக்கிறார். அந்த நேரத்தில் விவேக், சார்லி என போட்டிகள் இருந்தாலும் தன் தனித்துவமான நகைச்சுவை நடிப்பாலும், வீ சேகர் போன்ற இயக்குனர் படங்களில் நடித்து தன் இருப்பை தக்க வைத்து கொண்டிருந்தார் வடிவேலு.

2003-ல்  வெளி வந்த வின்னர் திரைப்படம் வடிவேலுக்கு இன்னும் உயரத்தை கூட்டியது. பாபா பட தோல்வியில் இருந்து அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டிருந்த ரஜினிகாந்த் சந்திரமுகி படம் குறித்து பி வாசுவிடம், முதல்ல வடிவேல் கால்ஷீட் வாங்கி வெச்சுக்கோங்க என சொல்லியிருக்கிறார். அந்த அளவிற்கு வடிவேலுவின் டிமான்ட் அந்த நேரத்தில் இருந்திருக்கிறது.

வடிவேலு கதை நாயகனாக நடித்த இம்சை அரசன் படமும் சக்கை போடு போட்டது. ஆனால் அதன் பின் அகலக்கால் வைக்காமல் நகைச்சுவை நடிகராக பயணித்தது வடிவேலுவின் சாமர்த்தியம்.

நிறைய சின்ன படங்கள் வடிவேல் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது.

இப்படியாக உச்ச இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஒரு பெரும் சறுக்கல் வந்தது. அந்த சறுக்கல் என்னவென்றால்?

2011 தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த்-வடிவேலு மோதல் பேசுபொருளானது. விஜயகாந்தை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சித்து வடிவேலு செய்த அந்த பிரச்சாரம் அந்த காலகட்டத்தில் விஜயகாந்த் இமேஜை பெரிதும் பாதித்தது அதே நேரத்தில் அ தி மு க வெற்றியடைந்ததால் விஜயகாந்தின் தே மு தி க எதிர்க்கட்சியாக முன்னேற்றம் பெற்றது.

அங்கு ஆரம்பித்த சறுக்கல்... அதன் பின் வடிவேலுவால் பெரிய அளவில் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை காரணம்.. நிறைய தயாரிப்பாளர்கள் அரசியல் காரணங்களால் தங்களுக்கு பிரச்சனை வரும் என்று அஞ்சி வடிவேலுவை புதிய படங்களில் புக் செய்யவில்லை. அதன் பின் வடிவேலு கதை நாயகனாக நடித்த எலி போன்ற படங்களும் வடிவேலுக்கு கைகொடுக்கவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் 2011 முதல் 2015 வரை காமெடி எரியாவை சமாளித்துக் கொண்டிருந்த சந்தானம் ஒருபுறம் கதாநாயகனாக நடிக்க ஒதுங்கி விட தமிழ் சினிமாவில் நகைச்சுவை வறட்சி அதிகமானது.

சதிஷ், யோகிபாபு போன்றோர் அந்த ஏரியாவை கவனித்துக்கொண்டாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. சோசியல் மீடியாவில் கவுண்டமணி படங்கள் வைத்த மீம் ஆரம்பத்தில் இடம் பிடித்து இருந்தது அது கொஞ்ச கொஞ்சமாக வடிவேலுக்கு மாறி இப்பொழுது முழுவதுமாக வடிவேலு மயமாக மாறிப்போய் விட்டது சமூக வலைதளம். 

வடிவேலு நடித்த காலங்களில் கூட எதிர்காலத்தில் டெக்னாலஜி வளர்ச்சியில் இப்படி கொண்டாடப்படுவோம் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவர் ஆக்ட்டிவாக இல்லாத இந்த 10 ஆண்டுகளில் அவரை மறக்காமல் வைத்திருப்பது என்னவோ சமூக வலைதளம்தான். அவர் கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷன் அந்த அந்த சூழ்நிலைக்கு பொருத்தி கொண்டாடி தீர்க்கிறது சமூக வலைதளம். அந்த வகையில் வடிவேலு மீம் உலகின் சூப்பர் ஆனது மகிழ்ச்சியான விசயமே.

இந்த நிலையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலுவின் ரீ என்ட்ரிகாக காத்திருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. சங்கர் அன் கோ விடம் ஏற்பட்ட ஈகோ மோதலால் அந்த படமும் நிறுத்தப்பட்டது.

இப்படியே பிரச்சனை நீண்டு கொண்டு போக ஒருவழியாக லைக்கா சுபாஷ்கரன் வடிவேலுவை நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை பேசி சுமுகமாக முடித்திருக்கிறார். அதாவது இன்றைய நிலவரப்படி சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு.

எது எப்படி இருந்தாலும் மீண்டும் வடிவேலுவின் வருகைக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். வெல் கம் வைகைப்புயல் வடிவேலு...

Post a Comment

0 Comments