மாமன் - திரை விமர்சனம்

மாமன் - திரை விமர்சனம்

இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டு களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச் சூழலில் இன்பாவுக்கு ரேகாவுடன் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் ஆகிறது. ஆனால், எப்போதும் மாமாவுடனே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையால் இன்பாவுக்கும் ரேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இன்பாவின் மனைவிக்கும் கிரிஜாவுக்கும் உறவு முறிகிறது. இறுதியில் விரிசல் சரியாகி உறவுகள் சேர்கிறதா இல்லையா என்பதுதான் கதை.

இதன் கதையை நடிகர் சூரி எழுதி இருக்கிறார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். குடும்ப உறவுகளின் நெருக்கம் அருகி வரும்இந்தக் காலகட்டத்தின், அதன் தேவைமற்றும் அவசியத்தை அழுத்தமாகப் பேசுகிறது, படம்.

குறிப்பாகத் தாய்மாமன் உறவு ஒரு குழந்தைக்கு ஏன் தேவை என்கிற கருத்தை அழகாகவே சொல்லியிருக்கிறார். அதேபோல் கணவன் - மனைவி பிரச்சினையில் கணவன் விட்டுக் கொடுத்துச் சென்றால் என்னதான் தப்பு, மனைவி இன்னொரு தாய்க்குச் சமம் என்பதையும்கதை பேசுகிறது. அக்கா - தம்பி உறவையும் படம் நேர்த்தியாகப் பேசியிருக்கிறது. இப்படி சென்டிமென்ட் உறவுகள் இருப்பதால், எமோஷனல் காட்சிகள் டன் கணக்காக வந்துகொண்டே இருக்கின்றன.

தொடர்ந்து வரும் இதுபோன்ற எமோஷனல் காட்சிகளால் திரைக்கதையில் ஸ்பீடு பிரேக் விழுந்த உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாகத் தந்தையை ஓரங்கட்டிவிட்டு குழந்தையை மாமன் வளர்த்தெடுப்பது போன்ற காட்சிகள் கொஞ்சம் ஓவர் கற்பனை. மாமனை விட்டு குழந்தை பிரிய மறுப்பதும் திருமணத்துக்குப் பிறகும் அது தொடர்வதும், அதை டேக் இட் ஈஸியாகக் காட்டியிருப்பதும் சற்று ஏமாற்றம். ராஜ்கிரண் - விஜி தொடர்பான காட்சிகளில், அவர்களின் அன்பும் செல்லச் சண்டைகளும் ரசிக்க வைக்கின்றன.

தாய்மாமனாக சூரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் மனைவி மற்றும் அக்காவுக்கு இடையே மாட்டிக் கொண்டு விழிப்பது உள்பட தன்பங்களிப்பை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்துக் கவர்கிறார். குறிப்பாக தன்னுடைய உணர்வுகளைக் கணவர் உள்வாங்கிக் கொள்ளவில்லையே என்கிற ஏக்கத்தில் மிகை இல்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அக்காவாக சுவாசிகா அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மருமகனாக நடித்திருக்கும் பிரகீத் சிவன் பண்ணும் டார்ச்சர், ரசிக்க வைக்கிறது. முதிய தம்பதியாக வந்து அறிவுரைகளை வழங்கும் ராஜ்கிரண் - விஜி, அம்மாவாக கீதா கைலாசம், ஜெயப்பிரகாஷ், அக்கா கணவராக வரும் பாபா பாஸ்கர் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். பால சரவணனுக்கு அதிக காட்சிகள் இல்லை. கவுரவ வேடத்தில் விமல் வந்து செல்கிறார்.

ஹேசம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசை படத்துக்கு உதவியிருக்கிறது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும் பக்கபலம்.


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments