பத்து தல - திரைவிமர்சனம்:- கன்னட மஃப்டி படத்தை ஈடு செய்ததா இந்த பத்து தல?
கன்னியாகுமரியில் தொழிலதிபராகவும் பிரபல தாதாவாகவும் இருக்கிறார் ஏஜிஆர் என்கிற சிம்பு. இவர் யாரை சொல்கிறாரோ அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்ற அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். இது ஒருபுறமிருக்க முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை திடீரென சிலர் கடத்தி விடுகின்றனர்.
முதல்வரை கண்டு பிடிக்க சிபிஐ களம் இறங்கி தீவிரமாக தேடி வருகிறது. முதலமைச்சரை கடத்தியது சிம்புவாக இருக்கும் என்று போலீசும் அவருக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனிடையே கவுதம் கார்த்திக், சிம்புவிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார்.
போலீஸ் ஒரு புறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் மக்கள் முன் சிம்புவை தவறானவனாக காட்ட துணை முதல்வர் கவுதம் மேனன் தீவிரமாக முயற்சி செய்கிறார். இறுதியில் கவுதம் மேனன் போடும் திட்டத்தில் சிம்பு சிக்கி கொள்கிறாரா? முதல்வரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஏஜிஆர் கதாப்பாத்திரத்தில் வரும் சிம்பு நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். முதல் பாதியில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றி ரசிகர்களை ஏமாற்றினாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களின் உணர்வுகளுக்கு தீனி போடுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக கலக்கி இருக்கிறார் சிம்பு.
தான் சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் கவுதம் கார்த்திக். இவர் பல காட்சிகளின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார்.
அரசியல்வாதியாக வரும் கவுதம் மேனன் வழக்கம்போல் எதார்த்த நடிப்பின் மூலம் கவர்கிறார். இது போன்ற கதைகளுக்கு கதாநாயகி என்று ஒருவர் தேவையில்லை அதே நேரத்தில், சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார் பிரியா பவானி சங்கர். அதே போல் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் சவுந்தரராஜா. சாயிஷாவின் குத்தாட்டம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
துரோகம், அரசியல், வெறுப்பு, கோபம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா. மாஸ் காட்சிகளின் வழியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். கூட இருப்பவர்கள் துரோகியாக மாறுவதும், உளவாளியான போலீஸ் என பழைய பாணியை பின்பற்றியுள்ளார். கன்னடப் படமான மஃப்டி படத்தை பெரிய மாற்றங்கள் செய்யாமல் அப்படியே கொடுத்துள்ளார்.
திரைக்கதையில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். முதல் பாதியில் சிம்பு சிறிது நேரமே வந்தாலும் இரண்டாம் பாதியில் அதனை சமரசம் செய்து நியாப்படுத்துகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் படம் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
படத்திற்கு கூடுதல் பலமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை அமைந்துள்ளது. பின்னணி இசையில் அட்டகாசம் செய்துள்ளார். ஃபருக் பாஷாவுடைய ஒளிப்பதிவு விருந்து படைத்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார்.
பத்து தல - ஒத்த தல சிம்பு
0 Comments