ரெட்ரோ - திரை விமர்சனம்

ரெட்ரோ - திரை விமர்சனம்

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) - சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார்.

தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதில் காதலி கண்முன்னே வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டியதால் பாரியின் திருமணம் நிற்கிறது, காதலியும் கோபித்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுகிறார்.

சிறையில் இருக்கும் பாரியின் சண்டை போடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது ஒரு கும்பல். இதற்காக அவரை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால், அந்த கும்பலை அடித்துவிட்டு தப்பிக்கிறார் பாரி. ஒரு பக்கம் அந்த கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தையின் ஆட்கள் தேட, தன் காதலியை தேடி புறப்படுகிறார் பாரி. காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? பாரியை தேடிக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன என்பதே ‘ரெட்ரோ’ படத்தின் திரைக்கதை.

படத்தில் பாராட்டத்தக்க முதல் விஷயம், தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷனுக்கான களம் என்றாலும் கூட, கதையை காதல் கோணத்தில் எழுதியிருந்த விதம். அதற்கேற்ப அமைக்கப்பட்ட காதல் காட்சிகளும் ஈர்க்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எந்தவித செயற்கைத் தனமும், ‘க்ரிஞ்சு’ வசனங்களும் இல்லாத காதல் காட்சிகள் அதிக சுவாரஸ்யத்தை தருகின்றன.

படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் பண்புகளை பார்வையாளர்களுக்கு கடத்த எடுத்துக் கொள்ளும் ஆரம்ப காட்சிகள் சிறப்பு. குறிப்பாக ‘கனிமா’ பாடலுடன் சேர்த்து வரும் ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டியிருக்கிறது.

படம் முழுக்க சூர்யாவின் ராஜ்ஜியம்தான். காதல் காட்சிகளில் தன்னை நிரூபிக்க பூஜாவிடம் உருகுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் வில்லன்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது என வெரைட்டி காட்டி ஈர்க்கிறார். கடந்த சில படங்களில் இருந்த மேனரிசங்களை எல்லாம் ஒதுக்கி மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.

பூஜா ஹெக்டேவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ‘டஸ்கி’ மேக்கப்பில் பக்குவமான நடிப்பை தந்து அப்ளாஸ் பெறுகிறார். ஜோஜு ஜார்ஜுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை என்றாலும் வில்லன் கேரக்டரில் நிறைவை தந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜெயராம், நாசர் எல்லாம் படத்தில் எதற்கு என்று தெரியவில்லை.

படத்தின் மற்றொரு ஹீரோ சந்தேகமே இல்லாமல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். படம் முழுக்க பின்னணி இசையில் அதகளப்படுத்தி இருக்கிறார். கனிமா பாடல் வரும் இடத்தில் சீட்டில் யாரும் அமரவில்லை. அது தவிர மற்ற பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

இரண்டாம் பாதியில் அந்தமானில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு ஹீரோ செல்லும்போது கதை வேறொரு பரிமாணத்துக்கு செல்கிறது. ஆனால் அதுவே படத்தின் பெரிய பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது. பிரிட்டிஷ் காலத்து அடிமை முறை, மிராசுதாரர் குடும்பம், ரப்பர் தொழிலாளர்கள், கல்ட், தீர்க்கதரிசனம் என இஷ்டத்துக்கு எழுதப்பட்ட திரைக்கதை சலிப்பை தருகிறது. இதன் பிறகு படம் எழவே இல்லை.

கிளாடியேட்டர் பாணியில் அமைக்கப்பட்ட சண்டை காட்சிகள் ஓகே ரகம் என்றாலும், அதற்கான பில்டப் திரைக்கதையில் சரியாக எழுதப்படாத காரணத்தால் அவை பெரிதாக எந்த தாக்கத்தையும் தரவில்லை. ஒட்டுமொத்தமாகவே ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித மந்தநிலையில் இருப்பதை உணரமுடிகிறது. ஹீரோ எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் அசாகய சூரர் என்பதை நியாயப்படுத்தும்படி சண்டைக் காட்சிகளில் ஒரு ‘ஃபயர்’ இல்லாதது குறை.

அதிலும் கடைசி 20 நிமிடங்கள் திரையில் வரும் திடீர் திருப்பங்களில் எல்லாம் எந்தவித அழுத்தமும் இல்லை. முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த எமோஷனல் அம்சங்களில் பாதி கூட இரண்டாம் பாதியில் சுத்தமாக மிஸ்ஸிங்.

அடிமைகளை மீட்கும் ரட்சகன், மகாபாரத குறியீடுகள் எல்லாம் இருந்தாலும் ஒரு நேர்த்தியான திரைக்கதை இல்லாததால் அவை பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகளில் இருந்த சுவாரஸ்யமும் எமோஷனல் தருணங்களும் ஓரளவு இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இது சூர்யா + கார்த்திக் சுப்பராஜின் ஒரு சிறப்பான தரமான ‘சம்பவம்’ என்று சொல்லி இருக்கலாம்.


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments